‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’ – டிரம்ப்

0
531

செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார்.
“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து “உண்மையை” தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது “வழக்கமான ஒன்றாக மாறிவிடும்” என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குண்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
தூதரகம் சென்ற ஜமால்
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் “பொய்” என செளதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பத்திரிகையாளர் ஜமால் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக செளதி கூறுகிறது.

செளதியின் உள்துறை அமைச்சரும், இளவரசருமான அப்துலாசிஸ்-பின்-செளத்-பின் நயிஃப் -பின்-அப்துலாசிஸ், தங்களது அரசாங்கமும் முழு உண்மையைக் கண்டறிவதில் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் பத்திரிகையாளரைக் கொல்ல ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் அற்றவை என்றும் செளதியின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

(bbc)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here