அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றும் ஆர்ப்பாட்டமும் நடைபவனியும் இடம்பெற்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வட மாகாண பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு நடைபவனி நான்காவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை வவுனியா – ஓமந்தையிலிருந்து ஆரம்பமான பேரணி மதவாச்சியை சென்றடைந்தது.
வீதிகளின் இருமருங்கிலிருந்தும் தமது ஆதரவைத் தெரிவித்த பாடசாலை மாணவர்கள் பேரணியுடனும் இணைந்து கொண்டிருந்தனர்.
சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்களும் இந்த நடைபவனிக்கு ஆதரவு நல்கினர்.
வவுனியா நகர மத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி, அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று இடம்பெற்றது.
மல்லாவி – அனஞ்சயன்குளம் பகுதியில் ஆரம்பமான பேரணி, மல்லாவி – சிவன் கோவில் வரை சென்றது.
இந்த கவனயீர்ப்பு பேரணியை மல்லாவி பிரதேச வர்த்தகர் சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
அத்துடன், கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் துணுக்காய் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதிக்கான மனு ஒன்றையும் கையளித்தனர்.