புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று (12) வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக விஸ்வரூபமெடுத்தது.
புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை, போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றன.
சர்வமத தலைமையோடு இணைந்து க்ளீன் புத்தளம் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இனம், மதம் பாராது ஆக்ரோஷமான எதிர்ப்பு பதாகைகளுடன் சந்ததி காக்கும் இந்த சரித்திர போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
அருவக்காளு, சேராகுளிய பிரதேசத்தில் நாட்டின் குப்பை கூளம் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கழிவுகள், நச்சு பதார்த்தங்கள், அபாயகரமான கழிவுகளை தட்டும் திட்டத்துக்கு எதிரான பொது மக்களின் சுழற்சி முறையிலான சத்தியாகிரக போராட்டம் 14 ஆவது நாளில் புத்தளம் நகரினை ஸ்தம்பிதம் அடையச் செய்தது.
புத்தளம் நகரம் எங்கும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கில் சகல ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகை 12.40 இற்கு நிறைவடைந்தது.
புத்தளம், கல்பிட்டி, பாலாவி, நாகவில்லு, எழுவன்குளம், கரைத்தீவு, சேறாக்குழி, மதுரங்குளி, கடையாமோட்டை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்து மக்கள் வெள்ளம் புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு திரண்டிருந்தனர்.விளையாட்டு கழகங்கள், சமூக சேவை அமைப்புக்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், இந்து சமூகத்தினர், வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மகளிர் அமைப்புக்கள் என பலரும் இந்த பேரணியில் இணைந்திருந்தனர்.
தங்கள் குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பாக பதாதைகளை ஏந்தி வரப்பட்டதோடு அந்தந்த பதாதைகளை பின்தொடர்ந்து அதனை சார்ந்தவர்கள் குழுவாக, வேண்டாம் வேண்டாம், குப்பை வேண்டாம் என ஒருமித்து குரல் எழுப்பியவாறு பின்தொடர்ந்தனர்.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அதிகளவான பெண்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய வண்ணம் கலந்து கொண்டிருந்ததை காணக்கிடைத்தது.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்து புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்ட செயலாளரிடம் நான்கு பக்கங்களை கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.