துருக்கியின் மேற்குகடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகொன்று நீரில் மூழ்கியதில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 25 காணாமல்போயுள்ளனர்.
துருக்கியின் கரையோர காவல்படையினர் இதனை உறுதி செய்துள்ளதுடன் குறிப்பிட்ட படகு எங்கு சென்று கொண்டிருந்தது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
படகு புறப்பட்டு சில நிமிடங்களில் படகிற்குள் நீர் புகுந்ததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகிலிருந்த ஈராக்கிய பெண்மணியொருவர் நீந்தி கரைசேர்ந்து விபரங்களை வெளியிட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண்மணி தனது கணவர் மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் பயணித்துள்ளார் , எனது பிள்ளைகள் உயிர்காக்கும் அங்கிகளை அணிந்திருந்தனர் படகு கவிழ்நததை தொடர்ந்து அவர்கள் காணாமல்போய் விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நானும் எனது கணவரும் கரையை நோக்கி நீந்த தொடங்கினோம் எனினும் எனது கணவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை அவர் நீரில் மூழ்கிவிட்டார் நான் 28 மணித்தியாலம் கடலில் நீந்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
படகில் 35 பேர் பயணித்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான தளமாக துருக்கியை 2015 முதல் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கானவர்கள் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு சென்றுள்ளனர்.
இதற்கான படகுபயணங்களின் போது பெருமளவானவர்கள் கடலில் பலியாகியுள்ள நிலையில் துருக்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.