இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களுக்கு ஒருநாள் கூட மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பின்னரும் வழங்கப்படமாட்டாது. எமது கடற்பரப்புக்குள் வேறு நாட்டவர்கள் சட்டவிரோதமாக வந்து மீன்பிடியில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று பதில் வெளி விவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் மீன்பிடிப்பதற்கு இரண்டு நாடுகளினதும் மீனவர் சங்கங்கள் இணக்கம் கண்டுள்ளன என்று வெளிவரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இது தொடர்பில் கடினமான நிலைப்பாட்டிலேயே பிரதமர் இருக்கின்றார் என்றும் பதில் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை மற்றும் இந்திய மீனவர் சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் மீன்பிடிப்பதற்கு மீனவர் சங்கங்கள் இணக்கம் கண்டுள்ளன என்று வெளிவரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இது நூறுவீதம் பொய்யான தகவலாகும்.
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களுக்கு ஒருநாள் கூட மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழங்கப்படவுமாட்டாது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது.
வருடம் ஒன்றுக்கு 120 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்கள் இதற்கு முன்னர் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது 83 நாட்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.இந்த விவகாரத்தில் எமது பிரதமர் கடினமான நிலைப்பாட்டில் இருக்கின்றார். அண்மையில் இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது.
எமது கடற்பரப்புக்குள் வேறு நாட்டவர்கள் சட்டவிரோதமாக வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எமது கடற்பரப்பை பாதுகாப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். எமது கடற்பரப்பில் பிறநாட்டவர்கள் வந்து மீன்பிடிக்க முடியாது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற உறவில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால் மீன்பி்டி விடயத்தில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றார்.