“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று இடதுசாரி சோசலிஷ முன்னணித் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
“ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்க பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமர், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு எதிரானது.
நீதிமன்றத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனநாயக விரோத செயல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான செயலிலீடுபட்டதில்லை. இதனால் தான் அவரை மீண்டும் பதவியில் நிறுத்த முயற்சி செய்கின்றோம் என்றார்.