பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

0
718

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி சுசென் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலைதொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் ஆரம்பமானது.
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் செயலாளர் திரு.காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து தேர்வு விளக்கம், பாடநூல் கற்பித்தல் என்ற தலைப்பில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு. அகிலன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்தார்.
உளவியல், படம் பார்த்து எழுதுதுதல், கட்டுரை என்னும் தலைப்புகளில் பயிற்றுநர் திரு.வி.பாஸ்கரன் அவர்கள் தனது செயலமர்வை ஆற்றியிருந்தார்.
‘கற்பித்தலின் எளிய பொறிமுறை” என்ற தலைப்பில் பேராசிரியர் திரு.சி.தனராஜா அவர்கள் மிகவும் சிறப்பாக பல்வேறு நாடுகளிலும் கற்பித்தல்முறைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து காணொளிகளுக்கு ஊடாக விளக்கமளித்ததுடன் ஆசிரியர்களிடம் கேள்விகளையும் முன்வைத்து அழகாக தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆரம்பவரலாறு தொடர்பில் பயிற்றுநர் திரு. கி.தவராஜா அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக விளக்கமளித்திருந்தார். மகாவலித்திட்டத்தின் வரலாறு குறித்து பயிற்றுநர் திரு.சி.ஜெகன் அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக விளக்கமளித்திருந்தார்.
நுணுக்க முறைக் கற்பித்தல் தொடர்பில் பயிற்றுநர் திருமதி உதயராணி அவர்கள் ஒளிப்படங்கள், செய்முறை உபகரணங்கள் வாயிலாக மிகவும் சிறப்பாக தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆரம்ப இலக்கணம் தொடர்பில் பயிற்றுநர் திருமதி சோ.சர்வேஸ்வரி அவர்கள் கையேடுகளை வழங்கி மிவும் சிறப்பாக செயலமர்வை நிகழ்த்தியிருந்தார்.
ஆசிரியர்களின் நேரத்தின்போது, பல ஆசிரிய ஆசிரியைகள் தாமாக முன்வந்து தாம் கற்பிக்கும் முறைகளை ஆற்றுகையாக வெளிப்படுத்தியிருந்தமையும் ஆசிரியர்கள் மாணவர்களாகவே மாறி அவர்களிடம் தமது மாணவர்கள் கேள்விகளைக் கேட்பதுபோல் கேள்விக்கணைகளைத் தொடுத்தமையும் செயலமர்வை மேலும் சிறப்பானதாக மாற்றியிருந்தது.
தொடர்ந்து ஆசிரியர்கள் தமது கற்பத்தலில் தாம் கொண்டுள்ள சந்தேகங்களை கேட்க, அதற்கு செயலமர்வை நடாத்திய பயிற்றுநர்கள் பொருத்தமான பதில்களை வழங்கியிருந்தனர்.
குறித்த ஆசிரிய செயலமர்விற்கு, ஸ்ரார்ஸ்பேர்க், நெவர் போன்ற இடங்களில் இருந்தும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வழமைபோன்று இம்முறையும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியஉணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது.
எதிர்வரும் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை தமிழ் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இவ்றி சுசென் பகுதியில் இடம்பெறவுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here