வடக்கு மகாண முலமைச்சரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்கு பற்றும் நிகழ்வுகளை நானும் புறக்கணிக்கின்றேன் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்கிறார் சிவஞானம்சிறீதரன்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது புறக்கணித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் நிலையில் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அழைப்புவிடாது ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை பலத்தை சிதறடிப்பதன் வடிவமே.
எனவே வடக்கு மகாண முலமைச்சரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்கு பற்றும் நிகழ்வுகளை நானும் புறக்கணிக்கின்றேன்.
இலங்கையின் பிரதமராக அவருடைய உத்தியோகபூர்வ பணிமனையின் ஊடாக வடக்கு மாகாணத்தின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர் பங்கு பற்றும் நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டுமைப்பு பங்குபற்றுவதே பொருத்தமானது.
அதை விடுத்து மாவட்ட அரச செயலகங்களின் அதிகாரிகளுடாக அழைப்பு விடுத்து அரச உயர் பண்பாட்டு உத்தியோகபூர்வ நாகரிகங்களை மீறி ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலின் ஊடான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவது தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உறுப்பினராகிய எனக்கு பொருத்தமற்றது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனா வாதத்தின் உக்கிரவடிமாகவே ரணில் விக்கிமசிங்க திகழ்வதையே பார்க்க முடிகின்றது.
அவர் இன்றும் தமிழ் தேசியத்தின் மீதான தீராத தாகம் காரணமாக பயணிக்கும் கொள்கை வாதிகளையும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் பிரித்து ஒற்றுமையை சிதைத்து தமிழர்களின் சுதந்திரம் வேண்டும் ஆன்மாவை அடக்கலாமென அவர் செயற்படுவதாகவே உணரமுடிகின்றது.
வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் உலகமெலாம் வாழும் புலம்பெயர் மக்களினதும் ஏகோபித்த வரவேற்பையும் மதிப்பையும் பெற்ற கடந்த வடமாகாண சபை தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் விருப்புவாக்குகளையும் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்து வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வுகளை நடத்துவதானது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் இன சகிப்புத்தன்மை நல்லிணக்கத்துக்கும் மக்கள் ஆணைக்கும் வைக்கப்பட்ட வேட்டாகும்.
கடந்த கால வரலாற்று பாடங்களை தமிழ்மக்களாகிய நாம் உற்று நோக்கும்போது இன்றைக்கும் தன் பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து வெளிவராத தென்னிலங்கைத் தலைமைகளின் ஒரு வடிவமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளதை நாம் உணர்கின்றோம்.