பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எல்லா வழக்குகளிலும் அவருக்கு பிணை கிடைத்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வழியாக இந்தியா திரும்பினார். ஆகஸ்ட் 12 ஆம் திகதி பெங்களூரில் நடக்கவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் சென்னை திரும்புவதாக இருந்தது.
பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் குடிவரவுத் துறை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டு, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு சென்னையில் இருந்து சென்ற சைபர் கிரைம் பொலிஸார் அவரைக் கைது செய்து தேவனஹள்ளி நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்திவிட்டு, மறுநாள் காலை 8 மணி அளவில் சென்னை அழைத்து வந்தனர்.
காலையில் சைதாப்பேட்டை 11 வது நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன்பாக திருமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராகப் பேசிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததால் வழக்குப் பதிவுசெய்திருப்பதாக சைபர் கிரைம் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது வாதிட்ட திருமுருகன் காந்தி தரப்பு வழக்கறிஞர், அந்த வீடியோவைத் தாங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றும் ஐ.நா. அமைப்புதான் பதிவேற்றம் செய்தது என்றும் தெரிவித்தனர்.
உடனே நீதிபதி பொலிஸார் பார்த்து, “ஜூன் மாதம் பதிவுசெய்த வழக்கிற்கு இப்போது ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி, பொலிஸ் காவலில் விசாரிக்க ஒரு நாள் மட்டும் அவகாசம் தருவதாகவும் நீதிமன்றக் காவலில் ரிமாண்ட் செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டார்.
இதை அடுத்து எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட திருமுருகன் காந்தி வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் தன் உடமைகளுடன் பழைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தபோது, அங்கு வந்த 30 க்கும் மேற்பட்ட பொலிஸார் மீண்டும் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது திருமுருகன் காந்தியுடன் வந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு வலுக்கட்டாயமாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட திருமுருகன் காந்தி, 2017 ஆம் ஆண்டில் சிறையில் இருந்து வெளிவந்த போது, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன் பிறகு, மேற்கு மாம்பலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அரசுக்கு எதிராகப் உரையாற்றிய, புழல் சிறைக்கு வெளியில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தது உள்ளிட்ட நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். ஒட்டுமொத்தமாக அவர் மீது ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன.
சிறையில் இருக்கும் போது உணவு சரியில்லாத காரணத்தால், திருமுருகன் காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி வேலூர் அடுக்கம்பாறை அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
செப்டம்பர் 29 ஆம் திகதி அவரது உடல் நலம் மேலும் மோசமடைந்ததால் வேலூர் அரசு வைத்தியசாலை ஐஎம்சியு பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில் திருமுருகன் காந்தி மீதான எல்லா வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதை அடுத்து அந்த ஆணைகள் அனைத்தும் வேலூர் சிறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டன. இதற்குப் பின் மதியம் ஒரு மணி அளவில் அரசு வைத்தியசாலையில இருந்து சிறைக்கு அழைத்துவரப்பட்ட திருமுருகன் காந்தி, மாலை ஐந்து மணி அளவில் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறை வாயிலில் மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூடியிருந்து அவரை வரவேற்றனர். சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய திருமுருகன் காந்தி, “தமிழ்நாடு அரசு கருத்துரிமையை முழுமையாக முடக்கிவருகிறது. தமிழகத்தில் அரசியல் சாஸனத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கவில்லை. பா.ஜ.கவினர் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசிவருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், மக்களுக்காகப் பேசுபவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று கூறினர். தாங்கள் எந்த அடக்குமுறைக்கும் பணியப்போவதில்லை என்றும் விரைவில் விரிவாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்றும் தமிழர் விரோத செயல்பாட்டுக்காக தொடர்ந்து அறவழியில் போராடப்போவதாகவும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
.