வடபகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை!

0
237

 வடபகுதி உள்ளிட்ட  நாட்டின் பல பகுதிகளிலும் இன்று, 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழைபெய்யும் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் அதனால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை, மன்னார் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 
குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியின் அடிவாரத்தில் வசித்த 300ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும்  முன்பள்ளியிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 11 மணியிலிருந்து 13 தடவைகள் குறித்த மலையிலிருந்து மண்மேடுகள் சரியும் பாரிய சத்தம் கேட்டதாலேயே குறித்த மக்கள் அச்சமடைந்து இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதோடு, கற்பாறைகள் சரிவு தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின் இவர்களுக்கான மேலதிக ஏற்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், மண்சரிவு அபாயம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் பல்வேறு தரப்பினருக்கு முறையிட்டுள்ளபோதிலும், இதுவரையில் தமக்கான தீர்வு ஏதும் பெற்றுத் தரப்படவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மலைப்பகுதியில் வசிப்போர் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here