ஜேர்மன் விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் விங்ஸ் விமானம் தானாக விபத்துக்குள்ளாகவில்லை மாறாக அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) தற்கொலை செய்ய நினைத்து அதை பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தற்கொலை செய்ய விமானத்தில் இருந்த 149 பேரின் உயிரை வாங்கிவிட்டார்.
லுபிட்ஸ் ஜேர்மனியின் பிரான்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள மான்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டார்ப் நகரிலும் அவருக்கு ஒரு அபார்ட்மென்ட் இருந்துள்ளது. அவருக்கு காதலியும் உண்டு.
இந்நிலையில் ஜேர்மன் போலீசார் மான்டபாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சோதனையின்போது முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அது என்னவென்று தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த லுபிட்ஸுக்கு தீவிரவாதிகளுடன் சம்பந்தம் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.