பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு, கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
473

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நேற்று (30.09.2018) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பு துணைப்பொறுப்பாளர் செல்வி பாக்கியநாதன் லட்சாயினி ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகதீபம் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த லெப்.கெணல் உருத்திரனின் சகோதரர் ஏற்றிவைக்க கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 02.11.1987 அன்று கொக்குவில் பகுதியில் வீரச்சாவடைந்த கப்படன் மோகன்ராம் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பொண்டி மாநகர துணை நகரபிதா நகல் சார்லி கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தார். அவர்தனது உரையில், தமிழ் மக்களின் நிலையைப் பார்க்கும் போது தனக்கு வேதனை அளிப்பதாகவும். பொண்டி மாநகரப் பகுதியில் தற்போது தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு உரிய கதவுகள் திறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை, இவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் நினைவு சுமந்த நடனங்கள், வல்து யூரோப் தமிழ்ச்சோலை மாணவன் செல்வன் கிருசிகேசன் அவர்களின் பேச்சு, கொலம்பஸ் தமிழ்ச்சோலை மாணவர்களின் ‘பார்த்தீபன் கனவு” என்ற தலைப்பிலான கவியரங்கம். ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை ஆசிரியையின் தியாகி திலீபன் நினைவு சுமந்த கவிதை, சோதியா கலைக்கல்லூரி மாணவி, தமிழர் கலைபண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் ஆகியோரின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் செல்வி பானுஜா, பிரான்சு இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நவநீதன் நிந்துலன் ஆகியோரின் பிரெஞ்சுமொழியிலான பேச்சு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
சிறப்புரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா மற்றும் தமிழீழ மக்கள் பேரவை செயற்பாட்டாளர் திரு.மோகன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
திரு.மேத்தா அவர்கள் தனது உரையில், தியாக தீபம் திலீபன் அவர்களின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீம் மலரட்டும் என்பதாயும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்ததாக ஆற்றியிருந்தார். தாயகத்தில் தற்போது உருவாகியுள்ள எழுச்சியை நினைவுபடுத்தியதுடன் புலம்பெயர் மக்களின் எழுச்சியும் அவசியம் என்று தெரிவித்திருந்ததுடன், நெருப்பாற்றில் இருந்துகொண்டிருக்கின்றோம். அதனை நீந்திக்கடக்கவேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமை என்பதாய் அவருடைய உரை தொடர்ந்தது.
திரு.மோகன் அவர்கள் தனது உரையில், தியாக திபம் திலீபன் அவர்களின் தியாகம் பற்றித் தெரிவித்ததுடன், தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி பொருத்தமான மண்ணில்தான் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த மண்ணில் இருந்த தியாக திலீபங்கள் உருவாகவேண்டும் என்பதாகவும் அவருடைய உரை தொடர்ந்தது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here