இளையோரின் ஆதரவு மாத்திரமே முதியோரின் ஒரேயொரு எதிர்பார்ப்பு!

0
490

முதுமைப் பருவத்தை என்றோ ஒரு நாள் நாம் அடைந்தே தீர வேண்டும் .இது இயற்கை நியதி. இதனை எவராலும் என்றுமே மாற்றி விட முடியாது. அன்று கட்டான உடலழகோடும் கம்பீர தோற்றத்தோடும் திகழ்ந்த இளைஞர்களும் யுவதிகளும் இன்று முதியோர்களாகி விட்டனர். இவர்களில் பலர் அநாதரவான நிலையில் பரிதாபத்தோடு வாழ்ந்து வருவதையும் நாம் காண்கின்றோம்.
இன்றைய நவீன உலகிலே முதியோரின் முக்கியத்துவம் இளைஞர்களால் உணரப்படுவதில்லை. இது ஒரு துரதிர்ஷ்டமானது. ‘முதியோர்’ என்றால் எதற்குமே பயனற்றவர்கள் என்று சிலர் நினைக்கின்றனர். முதியோர்’ வேறு யாருமல்ல…அவர்கள் இன்றைய இளைஞர்களின் பெற்றோர் ஆவர். நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள், நமக்காக உழைத்து உருக்குலைந்தவர்கள், நம்மை சமுதாயத்தின் முன் தலைநிமிர்ந்து வாழ வைத்தவர்கள், அனுபவசாலிகள், இளம் சமுதாயத்தின் எதிர்கால வழிகாட்டிகள்…
இவர்கள் அன்பாக, பண்பாக, பாசத்தோடு பிள்ளைகளால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.அவர்களைப் பராமரிப்பது பிள்ளைகளின் தலையான கடமையாகும். அதேவேளை முதியோர்களை பாதுகாப்பது சமுதாயத்தின் பொறுப்பாகும்.
இளம் தம்பதியருக்கு பிள்ளை பிறந்தால் அதற்காக எவ்வளவோ அன்பு காட்டுகின்றனர். அதன் பாதுகாப்புத் தொடர்பாக அக்கறை எடுக்கின்றனர்.அதே தம்பதியரின் பெற்றோர் முதுமையடைந்தால் அவர்களைப் பாதுகாப்பது எவரின் கடமை?
இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அரசாங்கம் அவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளை மதிப்பதற்கும் 2000ம் ஆண்டின் 9ம் இலக்க முதியோர் உரிமை பாதுகாப்புச் சட்டத்தினை இயற்றியது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியை முதியோர் தினமாகப் பிரகடனப்படுத்தி முதியோர்களைக் கௌரவப்படுத்தி வருகின்றது. 1991ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தினம் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேசிய விடுமுறை தினமாகவும் ஜப்பானில் முதியோரை கௌரவிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
முதியோர் தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக அரசாங்கம் (தேசிய முதியோர் செயலகம்)பல செயல் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. முதியோர் தமது தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதியோர்களுக்கென விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அடையாள அட்டை வைத்திருப்போர் பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, பஸ் வண்டி, மற்றும் தபாலகம் போன்ற இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கண்களில் வெண்படலம் ஏற்பட்டிருப்பின் இழந்த பார்வையை மீளப்பெற இலவச கண் சிகிச்சை, தனிமையினைப் போக்க பகல் நேர பராமரிப்பு நிலையம், 70 வயதைத் தாண்டியோருக்கு நிதி உதவிகள், உளவியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனை சபை ஆகியன ஏற்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய நவீன உலகில் இளைய சமுதாயத்தினரில் பலர் முதுமையினை’வெறுப்புடனேயே நோக்குகின்றனர். இந்த வெறுப்பின் வெளிப்பாடாகவே பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் வீதியோரங்களிலும், அனாதை இல்லங்களிலும் வேதனையோடு காலம் கழித்து வருவதை காண்கின்றோம்.இதனால் முதியோர் பலர் மனப்பாதிப்படைந்து வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
முதியோர்கள் அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள்.பலதுறைகளில் அனுபவமும் கொண்டவர்கள்.இவர்களது அறிவும் ஆலோசனையும் இன்றைய இளைய சமுதாயத்துக்கு அவசியம்.
முதுமைக்காலத்தில் தனிமை, ஏக்கம், நிம்மதியற்ற நிலை நிறைந்திருக்கும்.இவற்றைப் போக்கி சந்தோஷமாக வாழவேண்டுமானால் அவர்கள் மக்களுடன் தொடர்புடைய சமூகநல அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்போது தனிமையும் ஏக்கமும் அகலும். கிராம அபிவிருத்திச் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் சங்கம், மத்தியஸ்தசபை, முதியோர் சங்கம், சுற்றாடல் பணிகள், சிரமதான நடவடிக்கைகள் போன்ற சமூகநல செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் பயன் பெறக் கூடியதாக இருக்கும்.
முதியோர்களில் பெரும்பாலானோர் பல்வேறுபட்ட நோய்களாலும் ஊட்டச்சத்துக்குறைவினாலும் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சியும் முக்கியமாகும். இது தொடர்பில் முதியோர்களுக்கும் அவர்களைப் பராமரிப்போருக்கும் அறிவூட்டப்படல் வேண்டும்.
முதுமைக் காலத்தில் ஊட்டச்சத்து மிகமுக்கியமானதாகும். வீடுகளில் தனிமையில் இருந்து காலத்தை கழிப்பதை விட ஆத்ம திருப்திக்காகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது சாலச் சிறந்ததாகும்.
இதன் மூலம் போஷாக்கு மிக்க மரக்கறி வகைகள், மற்றும் பழ வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம். முதியோர் சிலர் தாங்கள் முதியோர்தானே என நினைத்து அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அக்கறை காட்ட தவறி விடுகின்றனர். சுத்தம் சுகம் தரும் என்பதை எக்காலத்திலும் மறந்து விடக் கூடாது.
முதியோர் சில நடைமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க முடியும்.
வீட்டில் முடங்கிக் கிடக்காமல் நடைப் பயிற்சியில் ஈடுபடுவது ஆரோக்கியம் தரும்.இயற்கைக் காட்சிகளை கண்டுகழித்தல், சமய கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடல், சங்கங்கள் அமைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தல், உற்சாகம் தரக்கூடிய செயற்பாடுகளில் பங்கெடுத்தல், சத்துணவுகளை உட்கொள்ளல், கொழுப்பு, மாமிசம் மற்றும் இனிப்புப் பண்டங்களை குறைத்துக் கொள்ளல் போன்ற நடைமுறைகளை கூடியளவு பின்பற்றி வந்தால் நோய்கள் அணுகாது.சந்தோஷமாக வாழவும் முடியும்.
கலாபூஷணம் எம்.ரி.ஏ.கபூர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here