அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்துள்ளன.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புதிய அதிபர்கள் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் ஆகிய வெகுஜன அமைப்புக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து கே.கே. எஸ் வீதி வழியாக பஜார் வீதியைச் சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து யாழ்.நகரின் மத்தியிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தைச் சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமான இடத்தை வந்தடைந்தது.
இந்தப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் “அனைத்து அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்”, “உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே”, “கூட்டாட்சி அரசே கொடுத்த வாக்குறுதி என்னவாச்சு!”, ” வாய்ப்பேச்சில் நல்லிணக்கம்…வதைப்பது அரசியற் கைதிகளையா?”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் கடும் ஆதங்கத்துடனும், ஆக்ரோஷத்துடனும் எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.