இந்தோனீசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த மரணங்கள் சுனாமியால் நிகழ்ந்தவையா என்ற தெளிவு இல்லை.
கடந்த மாதம் இந்தோனீசியாவின் லாம்போக் தீவை தொடர் நிலநடுக்கங்கள் தாக்கின. இவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவற்றில் மிகப் பெரியதான நிலநடுக்கம் ஆகஸ்ட் 5-ம் திகதி நிகழ்ந்தது. இதில் மட்டும் 460 பேர் கொல்லப்பட்டனர்.
2004 டிசம்பர் 26-ம் திகதி இந்தோனீசியாவின் சுமத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனீசியாவை சேர்ந்தவர்கள்.