சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும்: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

0
573

கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா – பத்தனம் திட்டாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண் பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெண்களில் 10 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு அங்கு அனுமதி வழங்குவதில்லை.

பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய இளம் சட்டத்தரணிகளின் அமைப்பு உள்ளிட்ட பலரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என சபரிமலை தேவசம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆட்சேபனை இல்லை எனவும் கேரள அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மாத்திரம் மாற்றுக் கருத்தையும் வௌியிட்டிருந்தனர்.

ஆண்களுக்கு பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது எனவும், பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல எனவும் தீபக் மிஸ்ராவின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம் எனவும் தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீபக் மிஸ்ராவுடன் கன்வில்கர் இணைந்து அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

எனினும், நீதிபதிகள் அமர்விலுள்ள ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மாத்திரம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்

மத வழிபாட்டு உரிமைகளை நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என மல்கோத்ரா கூறியுள்ளார்.

பக்தர்கள் தான் வழிபாட்டு முறைகளை முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம உரிமை அடிப்படையில் மத பழக்க வழக்கங்களை சோதிக்கக்கூடாது எனவும் நீதிபதி மல்கோத்ரா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஐந்து நீதிபதிகளில் 4 பேரும் ஒரே கருத்தைக் கொண்டு இருப்பதால், அவர்களின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக திருவாங்கூர் தேவசம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பெண்கள் இனிப்பு வழங்கி தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here