பசிபிக் தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையில் இருந்து நழுவிச் சென்று கடலில் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானிகளுடன் 47 பேரும் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமான, நியூகினி (Niugini) விமான நிறுவனத்தின் போயிங் ரக விமானம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby) என்ற இடத்தில் இருந்து மைக்ரோனேசியாவில் உள்ள சுக் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலிருந்த கடல்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுக் விமான நிலையத்தில் குறுகிய தூரத்துக்கு மட்டுமே ஓடுபாதை அமைந்திருந்ததால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.