“அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்” என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இறங்கிய நாளிலிருந்து இதுவரை டொனால்டு டிரம்ப் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், இந்த சமீபத்திய குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
சீனாவின் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர், இது “தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறியதுடன் கண்டமும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் நான்காண்டுகால பதவியில் பாதிக்காலத்தை அதாவது இரண்டாண்டுகாலத்தை கடக்கும்போது அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களின் புதிய ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
டிரம்ப் என்ன சொன்னார்?
உலகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி யாரும் அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) நியூயார்க்கில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசியபோது, அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்து வருவதாக எவ்வித ஆதாரமுமின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.