ஜேர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி வேண்டும் என்றே விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருந்து 150 பேருடன் லுப்தான்ஸா நிறுவனத்தின் கிளையான ஜேர்மன்விங்ஸ் நிறுவன விமானம் ஏ320 ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு கிளம்பியது. விமானம் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் செல்லும்போது திடீர் என்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 150 பேரும் பலியாகினர். விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவானவற்றை வைத்து கேப்டனை துணை விமானி அறைக்கு வெளியே வைத்து பூட்டியது தெரிய வந்தது. இந்நிலையில் துணை விமானியான ஜேர்ர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியாஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விமானத்தை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லுப்தான்ஸா நிறுவன சிஇஓ கார்ஸ்டன் ஸ்போஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸின் மார்செய்ல் நகர தலைமை சட்ட பிரதிநிதி பிரைஸ் ராபின் கூறுகையில், துணை விமானி லுபிட்ஸ் வி
மானத்தை அழிக்க நினைத்து அதை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியுள்ளார். ஆனால் அவர் இதை முன்கூட்டியே திட்டமிட்டாரா என்று தெரியவில்லை. கேப்டன் விமானி அறையில் இருந்து வெளியே சென்ற தருணத்தை லுபிட்ஸ் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
கேப்டன் மீண்டும் அறைக்குள் நுழைய கதவை தட்டியும் லுபிட்ஸ் திறக்கவில்லை. கேப்டன் வீடியோ கால் செய்ய முயன்றபோது அதற்கும் லுபிட்ஸ் பதில் அளிக்கவில்லை. லுபிட்ஸ் எதற்காக இவ்வாறு செய்தார் என தெரியவில்லை. விமானம் பறக்கையில் கேப்டனும், துணை விமானியும் நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
கேப்டன் கழிவறைக்கு சென்ற நேரத்தில் அறையின் கதவை பூட்டிக் கொண்டு லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாகிவிட்டார். லுபிட்ஸின் பெயர் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லை. அவர் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அவர் ஏர்பஸ் ரக விமானங்களை வெறும் 100 மணிநேரம் தான் ஓட்டியுள்ளார். இருப்பினும் அவரிடம் தேவையான அனைத்து சான்றிதழ்களும் இருந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகும்போது அவருக்கு மாரடைப்போ இல்லை வேறு எந்தவித உடல்நிலைக் குறைவோ ஏற்பட்டதாக தெரியவில்லை. விமானத்தை தனியாக இயக்கும் அளவுக்கு அவருக்கு திறன் இருந்துள்ளது என்றார். விமான விபத்து குறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு எப்.பி.ஐ.யின் உதவியை நாடியுள்ளது.