தியாக தீபம் நினைவேந்தலை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று நல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூபிக்கு முன்னால் நடைபெற்றிருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் பேரில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டுவந்து இரத்த தானத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபனை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிவான் மன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலியை மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவானிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானின் சமாதான அறையில் இந்த விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.
“இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவு கூருவதற்கு நல்லூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸாரின் புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.
பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நல்லூரில் இந்த நினைகூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதற்காக நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு அருகாமையில் பந்தல் இடப்பட்டு மேசையின் மேல் திலீபனின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவுகூரலை நடத்த தடை உத்தரவு வழங்கவேண்டும். அத்துடன், யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தச் சபையின் ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன, பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு உத்தரவிடவேண்டும்” என்று பொலிஸார் தமது விண்ணப்பத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த வழக்கில் முன்னிலையாகி நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்று மன்றில் சமர்ப்பணம் செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.