ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான ‘வெலி ராஜு’ என பரவலாக அறியப்படும் பிரியந்த சிறிசேன மீது சரமாரியான கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை, புதிய நகர பிரதேசத்தின் ஹத்தரே எல பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் இடமொன்றின் அருகே வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரியந்த சிறிசேனவின் நண்பரான 34 வயதுடைய ஹப்புதந்திரிகே துஷான் லக்மால் என்பவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தாக்குதலில் பிரியந்த சிரிசேனவின் தலையின் பின் பகுதி கடுங் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரியிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தாக்குதலையடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர் பின்னர் இரவு 9.00 மணியாகும் போது பகமூன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் சமப்வம் குறித்து பொலன்னறுவை உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.