நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு கூரப்பட்டது!

0
332

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக அமைக்கப்படுள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கை விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 25 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதிற்குட்பட்ட மாணவர்களே.

மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் நடைபெற்ற இன்றைய இந் நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here