முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி. எம். எஸ். ஜயரத்ன அடங்கலாக எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவரினதும் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று சி. ஐ. டி.க்கு அனுமதி வழங்கியது.
இது தவிர இலங்கை வந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஜயரத்ன மீண்டும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. காலி துறைமுகத்தில் பெருமளவு நவீன ரக ஆயுதங்களுடன் மிதக்கும் ஆயுதக் கப்பல் கடந்த ஜனவரி மாதம் பிடிக்கப் பட்டது. இதற்கு அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் எவன்கார்ட் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை பரீட்சிக்க காலி நீதவான் நிலுபுலி லங்காபுர இதன்போது உத்தரவிட்டார். தற்பொழுது இலங்கை வந்திருக்கும் முன்னாள் மேலதிக செயலாளர் ஜயரத்ன வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு விதிக்குமாறு சி. ஐ. டி. விடுத்த கோரிக் கையை ஏற்ற நீதவான் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல தடை உத்தரவு வழங்கினார்.
குறித்த ஆயுதக் கப்பலின் காப்புறுதி காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் கப்பல் பழையது என்பதால் அதில் எரிபொருள் கசிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சிலோன் சிப்பிங் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. எரிபொருள் கசிவு ஏற்பட்டால் துறைமுகத்திற்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்த சட்டத்தரணிகள் கப்பலிலுள்ள ஆயுதங்களை வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரினர் இந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
இதேவேளை கப்பல் சிப்பந்திகள் 11 பேரும் களைப்படைந்துள்ளதால் அவர்களுக்குப் பதிலாக வேறு சிப்பந்தி களை ஈடுபடுத்த அனுமதிக்குமாறு கப்பல் நிறுவனம் நீதிமன்றத்தை கோரியது. இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் வேறு சிப்பந்திகளை ஈடுபடுத்த அனுமதித்தார். எவன்கார்ட் மிதக்கும் ஆயுத கப்பல் கடந்த ஜனவரி மாதம் காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது. இதில் பெருமளவு ஆயுத கொள்கலன்கள் காணப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக சி. ஐ. டி. விசாரணை நடத்தி வருகிறது.