பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இம்மாத இறுதியில் நியூயார்க்கில் நடத்தவிருந்த சந்திப்பை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மூவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் பாகிஸ்தானின் புதிய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் அனுப்பிய கடிதத்தில் வெளிப்பட்ட உணர்வை மதிக்கும் வகையில் இம்மாத இறுதியில் நியூயார்க்கில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முன்மொழிவை இந்தியா ஏற்றது.
பாகிஸ்தான் பிரதமரின் கடிதம் அந்நாடு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவது, அமைதிக்கான பரஸ்பர ஆசை, பயங்கரவாதப் பிரச்சினையை விவாதிக்கத் தயார் நிலையில் இருப்பது ஆகியவை குறித்து பேசியது என்று ரவீஷ்குமார் குறிப்பிட்டார்.
ஆனால் புதிய தொடக்கத்துக்காக என்று பாகிஸ்தான் பரிந்துரைத்த பேச்சுவார்த்தை யோசனைக்குப் பின்னால் இருக்கும் தீய நோக்கம் வெளிப்பட்டுள்ளது; புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மை முகம் அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே உலகத்துக்குத் தெரியவந்துள்ளது என்று ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
இப்படி ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் அர்த்தமற்றது. மாறியுள்ள சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.