வவுனியாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதிகள் சிலவற்றில் இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அச்சுவரொட்டிகளில் உச்ச துரோகத்தின் குறியீடு
சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினமாச் செய்யவேண்டும். தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்கள் கைப்பற்றப்படுவதை நிறுத்த ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழர்களின் தேவை இதனை தந்தை செல்வா தனது கொள்கையாகப்போராடினார். என்று தலைப்பிடப்பட்டு தொடர்ந்து செல்வதுடன் மற்றைய சுவரொட்டியில்,
சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன?
என்று தலைப்பிடப்பட்டு பல்வேறு விடயங்களை குறிப்பிட்டதுடன் இறுதியில் ஒற்றை ஆட்சியை (ஏக்கிய ராஜ்ஜ) சமஷ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விரண்டு சுவரொட்டிகளுக்கும் தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடம், குருமன்காடு, குடியிருப்பு, வைரவப்புளியங்குளம் புதிய பேருந்து நிலையம், போன்ற பல்வேறு பகுதிகளிலிலும் காணக்கூடியதாக உள்ளது.