கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்துவிட்டது என்று முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய். போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இதுவரை எதுவுமே வழங்கப்படவில்லை என்பது இங்கு நேரில் வந்து பார்த்த போதுதான் தெரியவந்தது. எனவே தமிழ் மக்கள் வாக்களித்து வந்த ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் விரைவாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து வளத்தாப்பிட்டியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். அதன்போது 4 ஆம் கொலனி வளத்தாப்பிட்டி, தம்பிலுவில் போன்ற கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர்.
அவர்களை முன்னாள் எம்.பி. குணசேகரம் சங்கர் வரவேற்று அப்பகுதி களைக் காண்பித்தார். வளத்தாப்பிட்டி பளவெளிக்கிராம சிவன் கோவில் முன்றலில் மக்கள் தலைவர் த. துரைசிங்கம் தலைமையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கூட்டமொன்று நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடக்கில் மட்டும்தான் மீள்குடியேற்றம் நடக்கவில்லை மாறாக கிழக்கில் மீள்குடியேற்றம் முடிவடைந்துவிட்டது என்ற தவறான செய்தி சர்வதேசமெங்கும் திட்டமிட்டு முன்னைய அரசாங்கத்தால் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு நேரடியாக விஜயம் செய்து பார்த போதுதான் தெரிய வந்தது கிழக்கில் பல தமிழ்க் கிராமங்கள் இன்னும் மீள்குடியேற்றம் நடக்காமலுள்ளன. பாதி குடியேறிய பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் மீண்டும் அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாம் எல்லைக்கிராம மக்களின் நலன்களை கவனிக்க வேண்டிய கடமைப்பாடுள்ளவர்களாகவுள்ளோம். எனவே அவை தொடர்பான தரவுகளைச் சேகரித்து முழுமையான அறிக்கைகளை தந்தால் நாம் உள்ளூரிலோ, வெளிநாடு களிலோ, அரசாங்கத்துடனோ, நிறுவனங் களுடனோ பேசும்போது அதற்கான உதவிகளைப் பெற்றுத்தர முடியும். பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரூடாக சரியான தகவல்களைப் பெறலாமென்று நாம் நம்பவில்லை.
இங்கு பலதரப்பட்ட பிரச்சினைகளை நேரடியாகக் கண்ணுற்றோம். நானும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யும் இவற்றைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். இங்கு நிலம் சூறையாடப்பட்டிருக்கிறது. தொல்பொருள் புதைபொருள் என்று கூறி மக்களது காணிகளுக்கு எல்லைக்கற்கள் போடப் பட்டுள்ளன. இங்கும் அதைக்காண்கின் றோம்.