இரத்தினபுரியில் தமிழ் தோட்டப் போராளி அடித்துக் கொலை: சிங்களவர்கள் காட்டுமிராண்டி!

0
320

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இரத்தினபுரி கொழுஆவில பாம்காடன் தோட்டத்தில் இடம்பெற்று வரும்  போதைப் பொருள்  பாவனை உட்பட  சமூகத் தீமைகளுக்கு எதிராக போராடி வந்த குட்டித் தாரா என அனைவராலும் அழைக்கப்பட்டு வரும்   தமிழ் தோட்டப் போராளி தனபால் விஜேரத்னம் (வயது 36) காடையர் குழுவொன்றினால் நேற்று (19) மாலை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு   படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ள போதிலும் இந்த சம்பவத்தால் இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் பெரும் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏராளமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது இரத்தினபுரி செய்தியாளர் தெரிவித்தார்.

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் கள்ளச் சாராயம் வடித்து அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார்.

இதனால் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து, கள்ளச் சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு குட்டித் தாரா தொடர்ச்சியாக போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தி வந்துள்ளார்.

அதேவேளை தோட்டங்களில் வாழும் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரத்தினபுரி பாமன்கட முச்சக்ர வண்டி தரிப்பிடத்தில் இருந்த குட்டித் தாராவினை கடத்திச் சென்றுள்ள அடையாளம் தெரியாத நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர்.

அவருடன் மற்றுமொரு இளைஞரையும் குறித்த குழுவினர் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினரே இந்த கொலையை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த நபரின் வர்த்தக நிலையத்திற்கும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் இரத்தினபுரி பாமன்கார்டன் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதுடன் அதிகளவான பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சிறிபால என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரின் பிள்ளைகளே தனது மகனை கொலை செய்தாக அவரது தந்தை எஸ். தனபால் தெரிவித்தார்.

இந்நிலையில் இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முற்பட்ட நிலையில் பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் இரு பிள்ளைகளை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட 37 வயதான தனபால் விஜேரத்தினத்தின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டுள்ள விஜேரத்னத்தின் சகோதரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ” எமது குடும்பத்தில்   விஜேரத்னம் இரண்டாவது உறுப்பினர்.இவருக்கு 1 அக்காவும் 2  தங்கைகளும் உள்ளனர்.எமது அம்மா 9 வருடங்களுக்கு முன் இறந்தார்.எமது குடும்பத்தில் ஒரே ஆண் மகனாக இருந்த விஜே இன்று எங்களை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.எமது குடும்பத்தின் மீது    மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்த விஜே இன்று எங்கள்  குழந்தைகளுக்காக போராடி தனது உயிரிமையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ள எமது விஜேக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கிறேன்”,என அவர் தனது    கவலையை முன்வைத்தார்.

விஜேரத்னத்தின் மற்றுமொரு சகோதரி கருத்துத் தெரிவிக்கையில் ” எமது சகோதரன் விஜே திருமணமானவர்.ஆனால்  அவருக்கு பிள்ளைகள் எவருமில்லை.அவர் மேற்படி காடையர்களால் 3 தடவைகள் கடுமையாக தாக்கப்பட்டவர்.
போதை  ஒழிப்பிற்காக 15 வருடங்களுக்கும் மேலாக   போராடிய அவர் இன்று அதற்காக தனது உயிரையும் இழந்துள்ளார்.இவருடைய மரணத்தின் பின்னனில் பாதுகாப்பு தரப்பினர் சிலரின் ஒத்துழைப்புக்கள் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
 ஏனெனில் இறுதி வரைக்கும் இரத்தினபுரி பொலிசார் எமது வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்தனர்.நாம் பொய் சொல்வதாகவும் எனக்கு பைத்தியம் எனக்கூறியும் எங்களை திருப்பி அனுப்பினார்கள்.
இறுதியில் விஜே இறந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் எமது முறைப்பாட்டை இரத்தினபுரி பொலிசார் பதிவு செய்து கொண்டனர்.
இதுவரை இரத்தினபுரி பொலிசார் எமது சகோதரனின் போராட்டத்திற்கு எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை.
மாறாக  போதைப் பொருள் வியாபாரியையே எப்போதும் பாதுகாக்க முன்வந்தனர்.
விஜே போதைப் பொருள் பாவனைக்கு எதிரான 4  வழக்குகளை  இரத்தினபுரி நீதி மன்றத்தில் சந்தித்துக் கொண்டிருந்தார்.நாளைய (21)தினமும்   அவர் மற்றொரு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தார்.
சில சந்தர்ப்பங்களில் அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி  செயலகம் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுக்களிடமும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பல முறைப்பாடுகளை முன்வைத்து வந்தார்.
இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லை. எமது இந்த ஏழை மக்களின் நல்வாழ்விற்காக தனது உயிரை துறந்து சென்றிருக்கும் எமது சகோதரனின் எதிர்பார்ப்புக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவருடைய ஒரே பிராத்தனையாகவும் இருக்கிறது”,என அச்சகோதரி மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மாத்திரம் இரத்தினபுரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ள பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் இரத்தினபுரி பாம்காடன் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here