ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்!

0
304

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது.

மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 டபிள்யூ 697 விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது.

விமானத்திற்குள் ஆக்ஸிஜன் முகமூடிகள் வழங்கப்பட்டதை இந்த விமானத்தில் இருந்த பயணிகள் டுவிட்டரில் பதிவிட்ட காணொளிகள் காட்டுகின்றன.

166 பயணிகளுடன் சென்ற போயிங்-737 வகை விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமான கேபின் குழுவினர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்ததை அடுத்து பயணிகள் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜன் முகமூடிகள் இறக்கப்பட்டதையும் காட்டும் காணொளியை தர்ஷாக் ஹதி என்ற பயணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய மூக்கில் இருந்து ரத்தம் வடிவதை காட்டும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இன்னொரு பயணியான சதீஷ் நாயர், இந்த விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.

விமானத்தின் உள்ளே காற்றழுத்தத்தை பராமரிக்கின்ற விசையை அழுத்த விமான ஊழியர்கள் மறந்துவிட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான பயணியர் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி லலித் குப்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here