மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பாலஸ் தாபனம் செய்து வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமாக விளங்கும் பிள்ளையார் சிலை உட்பட பல விக்கிரகங்கள் இரவோடு இரவாக மாயமாக மறைந்துள்ளன. இதுகுறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தை முற்றாக மாற்றியமைத்து தற்காலத்துக்கு ஏற்ற வகையில் அழகான முறையில் கருங்கற்களையும் பயன்படுத்தி அமைக்கத் திட்டமிட்ட தர்மகார்த்தா சபையினர் 2004ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்து சகல விக்கிரகங்களையும் பாலாயத்தில் வைத்து பூசை வழிபாட்டுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த பத்து வருடங்களுக்குப் பின் கடந்த மாதம் 2ஆம் திகதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து வருடாந்த உற்சவம் இந்த மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா நடைபெற்று வருகின்றது.
ஆலயம் சுமார் 25கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதை அடுத்து பாலஸ்தானம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பழைய விக்கிரகங்களுக்குப் பதிலாக புதிய விக்கிரகங்கள் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய விக்கிரகங்களான பிள்ளையார், சிவன், பார்வதி, வண்டேஸ்வரர், நவக்கிரகங்கள் உட்பட கருங்கற்களால் செய்யப்பட்ட பல விக்கிரகங்கள் இரவோடு இரவாக மாயமாக மறைந்துள்ளன.
இந்த விக்கிரகங்கள் சில தர்மகர்த்தா சபை உறுப்பினர்களால் இரவோடு இரவாக வானில் கடத்தி செல்லப்பட்டுள்ளன பொலிஸாரிடம் முறையிட்டுள்ள வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், பிள்ளையாரின் அழியாத சொத்தான இந்த விக்கிரகங்களைக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.