தமிழர்களை ஆழமாக நேசித்த சிங்கப்பூரின் தேசத்தந்தை ‘‘லீ க்வான் யூ” ; மறைந்த செய்தி உலகத் தமிழர்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவ ப்படுத்தும் வடக்குமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் தெளிவான பார்வையைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஆற்றல் கொண்ட ஆளுமையை தமிழர்கள் இழந்து நிற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் தேசத் தந்தையின் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களை ஆழமாக நேசித்த சிங்கப்பூரின் தேசத்தந்தை “லீ க்வான் யூ” மறைந்த செய்தி உலகத் தமிழர்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பூர் என்கிற தேசத்தை நிறுவியது மட்டுமன்றி அதை ஒரு பொருளாதார வல்லாண்மை கொண்ட நாடாக மாற்றியதில் “லீ க்வான் யூ” ஆற்றிய பணி அளப்பரியது. சுதந்திரத் தின்போது, மிக நீண்ட காலம் நீடிக்கமுடியாது என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட சிங்கப்பூரை, தன்னுடைய 31 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், உலகம் வியக்கும் வகையில் மாற்றியது அவரின் ஆற்றலுக்குச் சான்று.
இன்று பலவிதங்களிலும் உலகின் முன்னுதாரணமான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குவதற்கு காரணம் அவரின் தொலை நோக்குமிக்க சிந்தனைகளே..
தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்து அவர் கொண்டிருந்த தெளிவான பார்வை உலகத் தமிழர்களின் உள்ளங்களில் அவருக்கு உயரிய இடத்தை அளித்தது.
சிங்கப்பூருக்காக உழைத்த தமிழர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளித்து ,சிங்கப்பூரில் எங்கள் தாய்த் தமிழை ஆட்சி மொழியாக்கியது தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றில் அவருக்கு உரிய இடத்தை வழங்கியது. வெறுமனே கருத்துக்களால் மட்டுமன்றி செயலாலும் தமிழர்களுடன் இணைந்து நின்ற லீ க்வான் யூவின் பிரிவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏராளமானோருக்கு பயனுள்ளதாக இருந்த தன்னுடைய நெடிய போராட்ட வாழ்வை நிறைவு செய்து இன்று இளைப்பாறியிருக்கும் எங்கள் தேசத்தின் தோழன் ,சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ க்வான் யூனுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம்.
அவரின் பிரிவால் துயருற்றிக்கும் சிங்கை மக்களுடன்,உலகத் தமிழர்கள் உணர்வால் இணைந்திருக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.