சிறீலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் உண்மையை கண்டறிதல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களில் முன்னேற்றம் தேவையென மனித மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்சலெட் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோருக்கான நிரந்தர அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமையானது பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது அமர்வில் நேற்று (12) இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பில் கருத்துரைத்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்தும் விடயத்தில் அதிகாரிகளின் செயற்பாடு ஓரளவு மெதுவாக இடம்பெற்ற போதிலும், ஏனைய செயற்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் ஏனைய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்த அலுவலகம் செயற்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் அமைதி மற்றும் நீடித்த சமாதானம் அவசியமென்பதை வலியுறுத்திய ஐ.நா. ஆணையாளர், பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.