ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வௌ்ளிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் செல்லவுள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், முக்கிய பல பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார். ஞாயிறு தினத்தன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன் முல்லைத்தீவிற்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை யாழ் மாவட்ட தேசிய பாடசாலை அதிபர்களை சந்தித்து தற்போது மாவட்ட பாடசாலையில் காணப்படும் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வடக்கு விஜயத்தின்போது நெடுந்தீவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்தோடு இந்த விஜயத்தின் போது பலாலி படைத்தலைமையகத்திற்கு சென்று பொலிஸ், விமானப்படை உள்ளிட்ட முப்படை அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் பலாலி பாதுகாப்பு தளத்தையும் பார்வையிடவுள்ளார். இதனை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.
ரணில் வி்க்கிரமசிங்கவின் மூன்று நாள் விஜயத்தில் இறுதியாக முல்லைதீவிற்கு சென்று அங்குள்ள பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த விஜயத்தினை பிரதமர் முன்னெடுக்கவுள்ளமை விஷேட அம்சமாகவே கருதப்படுகிறது.