பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும்செப்டெம்பர் மாத Free Tamil Eelam வேலைத்திட்டம்!

0
714

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த (02.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், போராட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அத்தோடு, 03.09.2018 திங்கட்கிழமை பாரிசில் இருந்து ஜெனிவாநோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.தவராஜா திவாகரன் அவர்களும் கலந்துகொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.
இது தொடர்பாக திரு. திவாகரன் எம்மிடம் தெரிவிக்கையில், இதனை ஒரு பயணம் என்பதற்கு அப்பால், எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் தமிழ் இளையோர் அமைப்பினூடாகப் பார்க்கின்றோம். ஏனெனில் எமக்கு நாடு கிடைக்கும் என்பது எமது பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதில் நாம் அனைவரும் உறுதியாகவுள்ளோம். எங்கள் அண்ணாமார் தொடங்கிய போராட்டத்தை நாங்களும் எங்கள் வலிமையால் தொடரவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது. கடந்தகாலத்தை எடுத்தால் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு போராளிகள் வன்னியில் இருந்து காடுகளுக்கூடாக கடும் சிரமங்களைச் சந்தித்து நீண்ட தூரங்களுக்கு நடந்தே சென்றுள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். அதனுடன் ஒப்பிடும்பொழுது எமது இந்தப்போராட்டம் சிறியதுதான். ஆனாலும் இது இங்குள்ள இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே இருக்கவேண்டும் எனத்தெரிவிக்கும் அதேவேளை, ஜெனிவா பொங்குதமிழுக்கு அனைவரும் திரண்டு வாருங்கள். அத்தோடு உங்கள் பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றை ஊட்டி வளருங்கள் என்பதே எனது கோரிக்கை என்றார்.
இதேவேளை, கடந்த 08.09.2018 சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளான Aulnay-sous-Bois, Cergy, Colombes,La Courneuve ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வருடாந்த ஒன்று கூடல்களில் (FORUM)அந்தப் பகுதிகளின் தமிழ்ச்சங்கத்தினருடன் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டு வெளிநாட்டவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், பதாதைகளை வைத்து விளக்கமளித்ததுடன், குறித்த பகுதிகளின் நகரபிதா மற்றும் உறுப்பினர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடப்போவதாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்தனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here