தமிழக மீனவர்களின் படகுகள் மீது சிறிலங்கா மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

0
314

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். குறிப்பாக நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத் துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு படகுகளில் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும், மீன்களை கடலில் கொட்டுவதும் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் சில நேரங்களில் இலங்கை மீனவர்களும், நாகை மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்து வரும் சம்பவமும் தொடர்கிறது. இதுபற்றி தமிழக கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கலெக்டரிடமும் மீனவர்கள் புகார் தெரிவித்தும் பலன் இல்லாமல் இருந்து வருகிறது.  பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கடலுக்கு சென்ற ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் படகுகள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான 2 படகுகளில் 9 மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடிக்க நேற்று மதியம் புறப்பட்டனர். ஒரு படகில் 5 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் என சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவில் கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிங்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை மீனவர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் 3 படகுகளில் வந்தனர். அவர்கள், ஆறுக்காட்டுத்துறை மீனவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து படகு அருகே வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் வந்த 2 படகுகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர். இதில் படகுகள் மீது பட்டு வெடித்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் திகைத்து நின்றனர். பின்னர் இலங்கை மீனவர்கள், ஆறுக்காட்டுத் துறை மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமானது.

மேலும் படகின் ஒரு பகுதி சேதமானது. பின்னர் அவர்கள் கைகளால் மீனவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தாங்கள் வந்த படகுகளில் சென்று விட்டனர்.

இலங்கை மீனவர்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பின்னர் படகுகளில் இன்று அதிகாலை கரை திரும்பினர். இந்த சம்பவம் பற்றி கடலோர காவல்படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here