ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது!

0
567

ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம் நேற்றைய தினம் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

20 க்கும் மேலான மனிதநேய பணியாளர்கள் நேற்றைய தினம் லண்டன் நகரத்தை ஊடறுத்த பயணத்தில் கலந்துகொண்டு தமது தமிழீழ தேசத்துக்கான பணிகளை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக இப் பயணத்தில் சிறியவர்கள் மற்றும் பெண்களும் கலந்துகொண்டதோடு , பிரான்சில் இருந்து இரு மனிதநேய பணியாளர்களும் இவ் ஆரம்ப நிகழ்வினில் இணைந்துகொண்டனர்.

பிரித்தானியாப் பிரதமரின் வாசல் ஸ்தலத்திற்கு முன்பாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போராட்ட தொடக்க நாளான இன்று பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு Andrew Rosindell அவர்களுக்கான மனுவும் கையளிக்கப்பட்டது.அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு Lyn Brown West Ham அவர்களுக்கான மனு சென்றடைய ஒழுங்குசெய்யப்பட்டது.

குறித்த ஈருருளிப் பரப்புரைப் போராட்டம் பிரித்தானியாவில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் எனும் ஓர்மத்துடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்கின்றது.

அதன்பொருட்டு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு, பொங்கு தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here