யாழ்ப்பாணம் பிறவுண் வீதிப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை கொழும்பில் சாவடைந்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பு அற்ற தொடருந்து கடவையால் கடக்கும் போது தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்துள்ளார்.
யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான கோப்பாயைச் சேர்ந்த வரதராஜன் குகப்பிரியன் (வயது-18) என்பவரே இவ்வாறு சாவடைந்தவராவார் .
மாணவனை மோதிய தொடருந்து குறித்த இடத்தில் நிற்காமல் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடருந்து தண்டாவாளத்துக்குக் குறுக்கே மின்கம்பங்களைக் போட்டும் துணிகளைக் கட்டியும் மீண்டும் தொடருந்து அந்த வழியாகப் பயணம் செய்யமுடியாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் ஏ.எஸ்.பி ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் கடவை அமைத்து தருவதற்கு தாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று தெரிவித்தனர்.