சிங்கப்பூரின் தேசத் தந்தையும் முன்னாள் பிரதமருமான திரு. லீக் குவான் யூ அவர்கள் கடந்த
23.03.2015 திங்கட்கிழமை காலமான செய்தி எம்மை மிகவும் துயரத்திற்குள்ளாக்கியுள்ளது.
இவர் கடந்த 31 ஆண்டுகள் சிங்கப்பூரை ஒரு நவ சிங்கப்பூராக்கிய சிற்பி என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது நடவடிக்கைகளில் ஒன்று, மலேசியாவில் இருந்து சிங்கப்பூரைப் பிரித்து தனிநாடாக்கி, இன்று உலகில்
சிங்கப்பூரை ஒரு சிறந்த, ஆசியாவில் மாத்திரமல்ல சர்வதேச அளவில் ஒரு வர்த்தகமையமாக்கி
மிளிரவைத்தவர் என்றால் மிகையாகாது.
அதுமாத்திரமல்ல, சிங்கப்பூரின் ஆட்சி மொழியில் ஒன்றாகத் தமிழ் மொழியை ஆக்கியதுடன், அங்கு
வாழ்ந்த தமிழர்களின் ஆற்றல் திறமைகளைக் கண்டு உரிய மதிப்பைக் கொடுத்தவர். பன்னாட்டுத்
தலைவர்களின் பெருமதிப்பைப் பெற்றுக் கொண்டவர். பதவியில் இல்லாதிருந்தபோதும், அதே மதிப்புடன்
மறையும் வரை வாழ்ந்தவர்.
எமது விடுதலைப் போராட்டத்தை மிகவும் நேசித்து, ஆதரவு கொடுத்து, கடந்த வருடம் ஒரு பிரபல
பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் எமது விடுதலைக்கான நியாயங்களை ஆதாரங்களுடன் வெளியிட்ட
துணிவும் நேர்மையும் மிக்க ஒரு மனிதர்.
இலங்கைத் தீவில் தமிழர் தனிநாடாகப் பிரிந்து செல்லும் தகைமை உண்டு என்பதையும் தமிழ் ஈழத்
தேசியத் தலைவரையும் அவரது குணநலன்களையும் மிகநேர்மையுடன் பாராட்டியதோடு அவரை நேரில்
சந்திக்கும் ஆவல்கொண்டிருந்ததையும் இவ்விடத்தில் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
ஏனெனில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்.
இவர் சிறிலங்காவின் அரசியல் தலைவர்களான எஸ்.டபிள்.யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா முதல் மகிந்தவரை நேரில் சந்தித்தும் பல தடவைகள் இலங்கைக்கு சென்றுவந்தவேளையிலும் இவர்களுடன் இலங்கை பௌத்த சிங்களக் குடியரசாக்கப்பட்டமை
பற்றியும் தமிழ் மக்களின் நிலங்கள், கல்வி உரிமை என்பன பறிக்கப்பட்டமை பற்றியும் சிறுபான்மை இனங்கள்
பின்தள்ளப்பட்டமை குறித்தும் 8 மில்லியன் சிங்கள மக்களுக்கு 2 மில்லியன் தமிழ் மக்கள் என்ற ரீதியில்
அவர்களின் வாக்குரிமை தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியமை குறித்தும் எடுத்துக் கூறியவர்.
தமிழர்களுக்கான தன்னாட்சியுரிமை வழங்கப்படாதவிடத்து சிறிலங்கா எந்தக் காலத்திலும்
முன்னேற்றமடையாத நாடாகவே இருக்கும் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியவர் லீ குவான் ஆவார்.
அது இன்று நிதர்சனமாகிக்கொண்டு இருக்கிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சும் அதன் உபகட்டமைப்புக்களும் பிரான்சு வாழ் ஈழத்தமிழர்களும்
அமரர் லீக்குவான் யூ அவர்களின் மறைவுத் துயரில் பங்குகொள்வதுடன் அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர்
நாட்டு மக்களும் ஆறுதலடைய வேண்டிநிற்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு.