தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளுக்கு வித்திட்ட கேணல் ராயூவின் 16 வது நினைவேந்தல் நிகழ்வும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆவணிமாதம் வீரச் சாவடைந்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வும் கடந்த 25.08.2018 அன்று பாரிசில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக 1988 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் துர்கா மற்றும் இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். பக்கி ஆகியோரின் சகோதர் கேணல் ராயூ மற்றும் பொதுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அக வணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களால் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தப் பட்டது.
தொடர்ந்து பிரான்சு பரப்புரைப் பொறுப்பாளர் உரையாற்றினார். அவர் தனதுரையில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேணல் ராயூவின் ஆழுமைபற்றியும், விடுதலைப்புலிகளின் இராணுவ தொழில் நுட்பத்தில் அவரது பங்களிப்பும் புதிய ஆயுத உற்பத்திக்கான அவரது தேடல்கள் குறித்தும். விடுதலைப் புலிகளின் சிறுத்தைப் படையணியின் உருவாக்கத்தில் கேணல் ராயூவின் பங்களிப்பு குறித்தும், உலகில் பல தொழில் நுட்பங்கள் இராணு பொருட்களின் தயாரிப்பில் பாதுகாப்பாக இருந்த போதும் அவ்விதமான பாதுகாப்பு வசதிகள் அற்ற நிலையிலேயே கேணல் ராயூ இராசயான தாக்கத்தால் நோய்வாய்பட்டார் என்றும் அவரது இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் நிறைவு பெற்றது.