திருக்கோவில் மண்டானை கிராமத்துக்கான நீர் விநியோகம் கடந்த மூன்று நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (27); மேற்கொண்டுள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இந்த மண்டானை கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக் கிராமத்தில் அண்மைக்காலமாக கடும் வரட்சி நிலவி வருகின்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப் பகுதி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் விநியோகமானது காலை ஒரு மணித்தியாலயத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மூன்று நாட்களாக நீர் விநியோக நடவடிக்கையானது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதனால் அப் பகுதி மக்கள் பாவனைக்கு நீரின்றி பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்தே ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டடுள்ளனர்.