இலங்கையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை சிறீலங்கா மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைக் கோரும் தீர்மான வரைவு வடக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிலேயே மேற்படி விடயம் கூறப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மான வரைவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் தீர்மானங்களை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமையினாலும், மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறுமாயின் நீதிமன்றில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது சிறப்பாக உருவாக்கப்படும் இலங்கைக்கான பன்னாட்டு நியாய சபையில் முற்படுத்துவதன் பொருட்டு, சிறீலங்காவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவருதல் வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் சபையை இந்தச் சபையானது கோருகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை, காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்து வைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளில் சிறீலங்காப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை இந்தச் சபையானது கோருகின்றது.
போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்துக்கு நுழைவுச் சான்றை நிராகரிக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் முன்மொழிந்தமைக்கு அமைவாக, பன்னாட்டு நியாயாதிக்கத்தின் பிரயோகம் அடங்கலாக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் உலக நாடுகளை இந்தச் சபையானது கோருகின்றது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.