தமிழ் மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணமும், கடப்பாடும் அரசாங்கத்திற்கு உள்ளதா?

0
233


அரசியல் யாப்பு விடயத்தில் அமைச்சர் ராஜிதவின் கருத்து தட்டிக் கழிக்கும் பேச்சாக இருப்பதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற எண்ணமும் கடப்பாடும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என்பதை காட்டுகிறதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.நகருக்கு வந்திருந்து சிறீலங்கா சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த, அரசியல் யாப்பு உருவாக்கம் சிறுவிடயம் அல்ல என்ற அடிப்படையில் உரையாற்றியிருந்தார். அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல்யாப்பு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடயம். பல வருடங்களாக நாம் பேசிவரும் விடயங்கள். 18 தடவைகள் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததென்பதும் தெரியாது. அந்த விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை.
இவ்வளவு காலம் பேசியபின்னர், அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஈர்க்கும் விடயங்களை செய்ய வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும், அவற்றை உள்ளீர்க்கவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணமும், கடப்பாடும் அரசாங்கத்திற்கு உள்ளதா? என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.
அமைச்சர் ராஜிதவின் கருத்துக்களை தவறென கூறவில்லை. ஆனால், தட்டிக் கழிக்கும் பேச்சாக இருக்கின்றது. போதுமானளவு தரவுகள் உள்ளன, என்ன செய்ய வேண்டுமென்று தெரியும்.
அவற்றை நீக்கி உடனடியாக செய்ய வேண்டிய சூழல் தற்போது உள்ளமையினாலும், 2019 மார்ச் மாதத்திற்குள் தமிழ் மக்களுக்கான விடயங்களை செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கின்ற காரணத்தினால், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு விடயத்தில் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும்.
எவ்வளவு தான் பிரச்சினையான விடயமாக இருந்தாலும், தமிழ் மக்களுக்குரிய அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும். கட்டாயம் செய்வார்கள் என்றும் நம்புகின்றேன் என்றார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here