மாமனிதர் ரவிராஜ் கொலை மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையால் தேடப்பட்டு வந்த ‘நேவி சம்பத்’ என அழைக்கப்படும் சந்தன ஹெட்டியாரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
2008 ஆண்டு காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, அவர்களை கடத்தி கப்பம் கோரியமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான இவர், நேற்று (14) பிற்பகல், கொழுப்பு கோட்டை லோட்டஸ் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதான குறித்த சந்தேகநபர், வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, கைதாகும்போது அவரிடம், போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்று இருந்ததாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்கு விசாரணைகளிலிருந்து தவிர்ந்து வந்ததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.