சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இன்று (12) விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தியது நாசா.
சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியப் புயல்கள் பூமியை தாக்கும்போது ஏற்படும் வெப்பக்காற்று ரேடியோ அலைகள் மற்றும் செயற்கைக்கோள்கள் செயற்பாட்டை பாதிக்கக்கூடும்.
பூமியிலிருந்து சுமார் 91 மில்லியன் மைல்கள் தொலைவிலுள்ள சூரியனின் வளிமண்டல மேலடுக்கை இந்த விண்கலம் படிப்படிப்பாக நெருங்கி 2024 ஆண்டுக்குள் சென்றடையும்.
நேற்று (11) விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்கலம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘சூரியனின் கொரோனா பகுதியை சென்றடைந்தவுடன் சுமார் ஏழு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவரவுள்ள இந்த விண்கலம்தான், மனிதன் படைத்த விண்கலங்களிலேயே மிகவும் வேகமானது’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.