விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக இரு சிறீலங்கா இராணுவத்தினருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் கடந்த 1998.09.10 ஆம் திகதி ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்று சிறீலங்கா இராணுவத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 46 வயதுடைய லெப்டினன் கேர்னல் ரொனி பாத்லமியுஸ், 45 வயதுடைய மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் 43 வயதுடைய கேர்னல் பிரியந்த ராஜகருண என்ற மூன்று இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இதில் இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியந்த ராஜகருண என்ற இராணுவத்தினருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பினை வழங்கினார்.
குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் அனுமதியுடன் அனுராதபுரம் நீதிமன்றில் வழக்குகள் இடம் பெற்று வந்தன.
மேலும் மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 25 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் நபரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார் என்று இராணுவ தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவு, ம் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவத்தினர் மன்றில் வாக்கு மூலம் வழங்கினர்.
இதன் போது குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இராணுவத்தினரில் முதலாவது எதிரியான ரொனி பாத்லமியூஸ் என்பவருக்கும் கொலைக்கும் தொடர்புகள் இல்லையென நீதிமன்றம் தெரிவித்து அவரை விடுதலை செய்தது.