சாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா காவல்துறையினர் அவர்களுக்கும் சிறீலங்கா காவல்துறையினர் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் மானிப்பாய் சிறீலங்கா காவல்துறையினரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். சாதாரண உடையில் சென்ற மானிப்பாய்சிறீலங்கா காவல்துறையினர் இவர்களைக் கைது செய்திருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தம்மால் பிரதானமாக தேடப்பட்டு வந்த இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்கள் என்று தெரிவித்தனர். இவர்களை விட மேலும் 9பேரைத் தேடி வருவதாகவும், அவர்கள் தலைமறை வாகி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றல் சேவையூடாக ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி சிறீலங்கா காவல்; நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றும் சில சிறீலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகப் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அலைபேசிகளை மையப்படுத்தியே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அண்மைக்கால வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.