கல்வி போதிப்பது ஒரு பொழுது போக்குப் போல் மாறிவிட்டது. பொழுது போக்குகளே கட மைகளாக மாறி வருகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகளில் பலரும் தமக்குக் கிடைக்கக் கூடிய அனுகூலங்களைப் பற்றியே சதாகாலமும் சிந்தித்தவர்களாக காணப்படுகின்றார்கள். எவ்வளவு விடுமுறை கிடைக்கும், எவ்வளவு சம்பள ஏற்றம் கிடைக்கும், எந்தவகை அண் மையிடப் பாடசாலை கிடைக்கும் என்று அனைத்தும் தமக்குச் சாதகமாக கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள். இந்த நிலை மாற்றப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தெரிவு செய்யப்பட்ட 194 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டது. மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது,
முள்பு அரச சேவைகள் குறிப்பாக ஆசிரிய சேவைகள் சிறப்பாகக் காணப்பட்டன. ஆசிரியர் தமது வேலைத்தளத்துக்குச் சென்றுவிட்டால் அவருக்கு கற்பித்தல் கடமையைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்காது. அதற்கான நேரமும் கிடைக்காது. ஆனால் இன்று அனைவருக்கும் வீட்டுக்கு அண்மையில் பாடசாலைகள் கிடைக்கப் பெறுகின்றன. அதனால் சுற்றுச் சமூகத்தில் நடைபெறுகின்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும் கடமை நேரத்தில் கலந்துகொள்ள ஆசிரிய ஆசிரியைகள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றார்கள். மாணவ மாணவியருக்குக் கல்வி போதிப்பது ஒரு பொழுது போக்குப் போல் மாறிவிட்டது. பொழுது போக்குகளே கடமைகளாக மாறி வருகின்றன.
ஒரு ஆசிரியர் தனது கடமை நேரத்தில் ஒரு மணித்தியாலம் வெளியில் ஏதாவதொரு வேலைக்காகத் தனது நேரத்தைச் செலவிடுவாரேயாயின் இரண்டு பாட வேளைகளில் அவரிடம் கல்வி கற்கவிருக்கின்ற ஏறத்தாழ 80 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலத்தினால் வீணடிக்கப்படுகின்றது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் கல்வி கற்பிக்கத் தயங்குகின்ற ஆசிரியர்கள் பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களில் விடியற்காலை மற்றும் மாலை நேர வகுப்புக்களில் சிறப்பாக செயற்படுவது விந்தைக்குரியது. இவை யாவும் எமது ஆசிரிய ஆசிரியைகள் பணத்துக்கும் சொகுசு வாழ்க்கைக்குந் தம்மை அடிபணிய வைத்திருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது. ஆசிரியத் தொழில் என்பது அறிவுசார் இளம்நெஞ்சங்களுடன் சம்பந்தப்பட்டது. அது நல்லதொரு உறவாக அமைந்தால் அதனால் ஏற்படும் மகிழ்வுக்கு எல்லையில்லை.
மாணவ மாணவியரின் வருங்காலம் பற்றிய உங்கள் சிந்தனை கரிசனையுடையதாக மாறினால் ஆசிரியத் தொழில் உங்களுக்கு நிறைந்த மன மகிழ்வைத் தரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை – என்றார்.
நியமனங்கள் வழங்கப்பட்ட ஆசியர்கள் இன்று (06) கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். இது விடுமுறைக் காலம் என்பதால் வலயங்களின் ஊடாகப் பாடசாலை அதிபரைத் தொடர்பு கொண்டு கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும். பாடசாலைகளில் கடமை ஏற்பது தொடர்பில் இடர்பாடுகள் காணப்பட்டால் வலயக் கல்விப் பணிமனையிலாவது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.உதயகுமார் தெரிவித்தார்.
ஆசியர் நியமனங்களைப் பெற்றவர்களுக்கான முன் சேவை பயிற்சி நாளை மறுதினம் புதன் கிழமை வட்டுக்கோட்டை தொழில் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகும். 21 நாள்களை கொண்ட வதிவிட பயிற்சியாக இது அமையும். காலை 6 மணிக்கு உடற் பயிற்சியுடன் ஆரம்பமாகி மாலை கலை அம்சங்களுடன் கூடிய பயிற்சி நெறிகள் நடைபெறும். இந்த பயிற்சி நெறியில் அனைவரும் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். கற்பித்தலுக்காக உங்களைத் தயார் செய்யும் பயிற்சியாக இது அமையும். பயிற்சியின் முதல் நாளும் நிறைவு நாளும் இரண்டு பரீட்சைகள் உங்கள் தயார்படுத்தல் நிலைகளை அறிந்து கொள்வதற்கு நடத்தப்படும் என்று மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.