சிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (04) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு மகேசு ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஈகைச்சுடரினை மூதூரில் மனிதநேயப் பணியாளர்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
மூதூரில் பட்டினுக்கு எதிரான அமைப்பில் பணியாற்றிய போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ம.நிதிலன் மூதூரில் இடம் பெற்றது மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிகப் பெரும் படுகொலை எனத் தெரிவித்ததுடன், அச் சம்பவத்தில் 23 வயது தொடக்கம் 54 வயதுடையவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களின் பெயர் விபரத்தையும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா ஆபத்தான சூழல் எனத் தெரிந்தும் மனிதநேயப்பணியாற்றிய போது படுகொலை செய்யப்பட்டவர்கள் இவர்கள். எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு சச்சி அவர்கள் உரையாற்றும் போது பல இடையூறுகளுக்கு மத்தியிலேயே இந்த நினைவு தூபி அமைக்கப்பட்டதாகவும் மே 18 மற்றும் ஆகஸ் 04 ஆகிய தினங்களில் இவ்விடத்தில் வணக்க நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மூதூரில் மனிதநேயப் பணியார்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன், இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி பானுஜா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.