முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஆயிரக்கணக்கானோர் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தை நோக்கி வந்த போராட்டக்காரர்களை, சிறீலங்கா காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடைகளைத் தகர்த்தெறிந்து, நீரியல்வளத் திணைக்கள வேலிகளைப் பிய்த்தெறிந்து போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்தார்கள்.
போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் சந்திக்க மறுத்தமையால், திணைக்களத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டது. தொடர்ந்து திணைக்களத்தின் இரு வாசல்களிலும் கொட்டில்கள் அமைத்து தொடர் போராட்டத்தில் மக்கள் குதித்தார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை மீன்பிடிமுறையை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த 24 ம் திகதி போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. சுருக்குவலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் தெரிவித்திருந்தனர். அவர்களின் வாக்குறுதி மீறப்பட்டதையடுத்து நேற்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்பாக நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பேரணி முல்லைத்தீவு பொதுச்சந்தை வழியாக நகரைச் சென்றடைந்தது. அங்கிருந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தை காலை 10 மணியளவில் சென்றடைந்தது.
நீரியல் வளத் திணைக்களத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. திணைக்களத்துக்கு முன்பாக மக்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். திணைக்கள அதிகாரிகள் தம்முடன் சந்திப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நீண்டநேரமாகியும் அதிகாரிகள் வரவில்லை. உள்ளே செல்வதற்கு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் எத்தனித்தார்கள். பாதுகாப்புக் கடமையிலிருந்த சிறீலங்கா காவல்துறையினருடன் முறுகல் ஏற்பட்டது.
தடையையும் தாண்டி, நீரியல்வளத் திணைக்கள வேலிகளைப் பிடுங்கி எறிந்து ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தார்கள் மக்கள். போராட்டக்காரர்கள் உணர்ச்சிமிகுதியால், கல்களால் நீரியல்வளத் திணைக்களத்தின் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணாடிகள் நொருங்கியது.
பெருமளவு காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். கலகமடக்கும் கண்ணீர்ப் புகைக்குண்டு அடிக்கும் காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்த ராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரைப் அழைத்துப் பேச்சு நடத்தினார்கள். அதிகாரிகளையும் அழைத்து காவல்துறையினர் பேச்சு நடத்தினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிலமையை விளக்கினார். கொழும்பிலுள்ள மீன்பிடி அமைச்சர், நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளருடன் அலைபேசியில் பேச்சுக்கள் தொடர்ந்தன.
எதிர்வரும் 8ஆம் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு உடனேயே ஒழுங்கு செய்யப்பட்டது. அதுவரையில் சுருக்கு வலைக்கு தடைவிதிக்க பணிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
தமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள். நீரியல்வளத் திணைக்களத்தின் இரண்டு வாசலிலும் பந்தல் அமைக்கப்பட்டது. கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சங்கங்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.