சிறீலங்காஇராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 518 ஆவது நாளாக இன்றும் சிறீலங்கா இராணுவ முகாமிற்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாம் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள எமது வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று எமது பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். எனவே விவசாய பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராமநாதனும் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப் போராட்டம் குறித்து தமிழ் அரசியல் தலமையோ மௌனம் காத்துவருவது தமக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தமது நிலம் தமக்கு கிடைக்கும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தமது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.