நாங்களும் இந்த நாட்டின் இறைமையுள்ள குடிமக்களாக எமது பிரதேசங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய முறையில் வாழ வழியிடப்பட வேண்டும் எனக் கோரினால் நாங்கள் பிரிவினை கோருகின்றோம் என்று ஒப்பாரி வைக்கின்றார்கள். தொடர்ச்சியான இவர்களின் அழுத்தங்கள் ஒருநாள் ஓய்வுக்கு வரும். அதுவரை எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
போரின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான பன்னாட்டுப் பெண்கள் மாநாடு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. நேற்று (22) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
போருக்குப் பின்னரான காலத்தில் இங்கு நடைபெறுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான மக்களுக்கு வடமாகாண சபையினால் வழங்கப்படுகின்ற உதவிகள் மிகச் சொற்பமே. மலையளவு தேவைக்கு தினையளவு உதவி என்ற கணக்கிலேயே அமைந்திருக்கின்றது எமது உதவிகள்.
இவர்களின் தேவைகள் பற்றியும் இவர்களை சமுதாய நீரோட்டதுடன் மீள இணைத்து முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையிலும் உதவித் திட்டங்களை எம்முடன் சேர்ந்து அறிமுகம் செய்யும்படி கொழும்பு அரசை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்ற போதும் அவர்கள் அதைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியாகத் தமக்கு உதவக்கூடியவர்களைத் தேடிக்கண்டு பிடித்து உதவிகள் செய்யப்பார்க்கின்றார்கள்.
இது போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிப்புற்ற மக்கள் பற்றி ஆய்வுகளை பல கோணங்களில் இருந்தும் மேற்கொண்டு தமது அறிக்கைகளை பக்கச்சார்பின்றி சமர்ப்பிப்பதன் மூலம் பாதிப்புற்ற மக்கள் சம்பந்தமான விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அரசிற்கும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு உதவியாக இருக்கும்.
பெண்களை வலுவூட்டும் போது வெறுந் தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவதை மட்டும் அது குறிக்காது. அவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் செயற்திட்டங்கள் எந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கையை, வாழ்க்கைத்தரத்தை மாற்றுகின்றன என்பதையும் நாங்கள் அவதானிக்க வேண்டும். வலுவூட்டல் எம்மை பிழையான வழிகளுக்கு இழுத்துச் செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். வலுவூட்டல் சமூக மேம்பாட்டுக்கு இடமளிக்க வேண்டுமே ஒளிய சமூக சீரழிவுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது.
அடுத்து எமது பொதுவான அரசியல் விடயங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள். இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள். அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது. பெரும்பான்மை இனத்தவர்கள் கூறுகின்ற அனைத்து விடயங்களுக்கும் தலையாட்டிப் பொம்மைகளாக தலையாட்டிக்கொண்டு தமிழ் மக்கள் வாழ வேண்டுமென அரசு எதிர்பார்க்கின்றது.
நாம் எமது ஒவ்வொரு தேவைகளையும் போராடிப் பெறவேண்டிய சூழ்நிலையிலேயே இன்று இருக்கின்றோம். தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி இருக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் அனைவரையும் அண்டை நாடுகளுக்கு துரத்திவிடவேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூச்சல் போடுகின்றார்கள் சிலர். அவர்கள் மீது அரசு நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தற்செயலாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஏதோ கூறிவிட்டார் என்பதற்காக அமைச்சுப் பதவிகள் பறிப்பு, குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் என அனைவரும் இணைந்து கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்த நிலைகள் தொடரக்கூடாது . இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும்தெரிவித்தார்.